Monday, November 10, 2008

தேனுர் சிவாஜி

dear readers, i know this senthil last 2 years, this week kumudam wrtiesup about him.




படித்தது இன்ஜினீயரிங். பார்த்தது அமெரிக்காவில் உள்ள டெட்ராய்ட்டில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் வேலை. சம்பளம் மூன்று வருடத்திற்கு முன் மாதம் நான்கு லட்சம்...
பேங்கில் பேலன்ஸ் கோடிகளை நெருங்கும்போது மனதில் சின்ன குறுகுறுப்பு. பட்டென வேலையை விட்டார். திருச்சிக்குத் திரும்பினார் செந்தில்குமார்.
`உனக்கென்ன பைத்தியமா பிடிச்சிட்டு!' என்று உறவுக்காரர்கள் முதல், நண்பர்கள் வரை பலரும் ஆலோசனைகளையும், ஆற்றாமையையும் அள்ளிக்கொட்ட, எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் கிராமம் கிராமமாக சைக்கிளில் அலைந்திருக்கிறார் செந்தில்குமார். இறுதியாக தேனூரில் தன் வாழ்க்கையை செட்டிலாக்க முடிவு செய்தார்.
விவசாயம், வேலை, சாலை என சகலத்திலும் பின்தங்கிய ஒரு குக்கிராமத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயர் ஒருவர் செட்டிலாகி சாதிக்க என்ன இருக்கும்?
முதல்கட்டமாக சின்னதாக ஒரு மருத்துவமனை, ஒரு கம்ப்யூட்டர் சென்டர். சிறுவர் சிறுமிகளுக்கு ஒரு மரத்தடி பாடசாலை என தன் கைக்காசை செலவழித்து காரியங்களில் இவர் இறங்க, இன்று ஒட்டுமொத்த கிராமமும் செந்தில்குமாரை `எங்க ஊர் சிவாஜி!' என்கின்றனர்.பிறந்தது திருச்சி அருகே உள்ள திண்ணனூர் கிராமம் என்றாலும், தேனூரை தேர்ந்தெடுத்து அந்த கிராமத்தை மேம்படுத்த தன் சேமிப்பில் இருந்து இதுவரை நாற்பது லட்ச ரூபாயை செலவழித்திருக் கும் இந்த லட்சிய மனிதரை நேரில் சந்தித்தோம்.
வேஷ்டி-சட்டை. அதுவும் மலிவாக. கஞ்சிபோட்டு விறைப்பாக இல்லாமல் குழைவாக... கேரியர் வைத்த சைக்கிள். ஹாண்டில் பாரில் சாப்பாட்டுத் தூக்குப் பாத்திரம். கேரியரில் மஞ்சள் பையில் லேப்டாப். ஒட்ட வெட்டிய முடி. ஒழுங்கு படுத்தாத மீசை, தாடி என தானும் ஒரு கிராமத்து மனிதராகவே மாறியிருந்தார் செந்தில்குமார்.
``நான் மாறவில்லை. எப்பொழுதுமே இப்படித்தான்'' என்றவர் தன்னைப்பற்றிச் சொல்லத் துவங்கினார்.
``அப்பா கோபாலன். சர்க்கரை ஆலையில் வேலை பார்த்தவர். அம்மா லீலா. அண்ணன் டாக்டர், இலண்டனில். அக்கா திருமணமாகி சென்னையில். நான் கிராமங்களுக்கு சேவை செய்யப்போறேன்னு தேனூருக்கு வந்திட்டேன்.
2005 ஜனவரி 24-ல் வேலையை ஆரம்பிச்சேன். இன்னைக்கு நாலு வருஷம் ஆகப் போகுது. பாதி நிறைவேறி இருக்கு!
கிராமங்களில் அடிப்படையான மருத்துவ வசதி இல்லாமல் எத்தனையோ பேர் தெனந்தெனம் சாகிறாங்க. அப்படி ஒரு கிராமமாகத்தான் தேனூரும் இருந்துச்சு. அதனால் முதலில் ஒரு மருத்துவமனையைக் கட்டினேன்.
அப்புறம் பள்ளிக்கூடம்.


கல்விக்கூடத்தை இயந்திரம யமாக்காமல் யதார்த்த அணுகுமுறையை கடைப்பிடிக்கிறோம். முதலில் உலக வரலாறு படிக்கணும்னு அவசியமில்லை. உங்களைச் சுத்தி இருக்கிற கிராமங்களைப் பற்றியும், அந்த ஊர்களோட சிறப்புகளையும் தெரிஞ்சுக்கிடணும். இதுதான் எங்க பாட முறை.கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகப்படுத்தணும். அதுக்காக தொழிற்கல்வியை தொடங்கினோம். மண்புழு உரம், டேட்டா என்ட்ரி ஆபரேட்டர், திருப்பூர் வேஸ்ட் பனியன்களை வரவச்சு அதை நூலாக பிரித்துக்கொடுப்பது, சமுதாயக்கூடம் கட்டுவதென பல்வேறு வழிகளில் வேலை வாய்ப்பை இந்த கிராமத்தில் அதிகப்படுத்தி இருக்கோம். இயற்கை வேளாண்மையை செய்கிறோம். எண்ணெயும் எடுக்கிறோம். இதுவரை 3000 மரங்கள் நட்டிருக்கோம்.
இதெல்லாம் சாதாரண விஷயந்தான். மனசுக்குப் பிடிச்சிருக்கு. அதனால சுமையாத் தெரியல. கிராமத்துக்கு நல்லது செய்யணும்ங்கிற விஷயம் மட்டுந் தான் கடமையாத் தெரியுது. இப்ப நான் செய்யற விஷயம்... ரொம்ப நாளா என் மனசுல ஊறுன விஷயம்.
நான் ஆரம்பித்த இந்த வேலையில் இப்பொழுது என் கல்லூரி, சாஃப்ட்வேர் நண்பர்கள் உதவி பண்ண ஆரம்பிச்சிருக்காங்க.
இனி எங்களுக்குத் தேவை என்னவென்றால், அரசாங்கப் பள்ளி ஆசிரியர்கள், மருத்துவ நிபுணர்கள், கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட மாணவர்கள், செவிலியர் எல்லாம் வாரம் ஒரு நாளோ, மாதம் இரு நாளோ கொஞ்சம் வந்து போனால் போதும். இந்த கிராமங்களின் வளர்ச்சியில் இன்னும் வேகம் கூடும். இப்போதைக்கு இதுதான் எனக்கு தேவை'' என்று பிரமிப்பூட்டுகிறார் செந்தில்குமார்.
செந்தில்குமாரின் தாய் லீலாவோ, ``சீக்கிரம் இவனுக்கு ஒரு கல்யாணம் பண்ணி வைக்கணுங்கிறதுதான் எங்களோட ஆசை. ஆனால், சம்பாதித்த காசை சேவைன்னு செலவு பண்ற பிள்ளைக்கு யார் பொண்ணு தர்றாங்க... அதுவுமில்லாம `உங்க புள்ளை நல்லாப் படிச்சுட்டு, நல்லா சம்பாதிக்கிறப்பவே ஏன் இப்படி ஆயிட்டார்'னு அபத்தமா பேசுறதுதான் மனசுக்கு கஷ்டமா இருக்குதுங்க!'' என்று வேதனையோடு கண்கலங்கினார்..
- இரா.கார்த்திகேயன்படங்கள் : சுதாகர்
thanks kumudam
U CAN SEE THE LINK.
http://www.kumudam.com/magazine/Kumudam/2008-11-12/pg27.php