Saturday, October 25, 2008

பிரிட்டனில் பொருளாதார வீழ்ச்சி இன ரீதியான பதற்றத்திற்கு வழிவகுக்கும்

குடிவரவை கட்டுப்படுத்தாத பட்சத்தில், பொருளாதார வீழ்ச்சி இன ரீதியான பதற்றத்திற்கு வழிவகுக்குமென பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினரொருவர் (எம்.பி.) அச்சம் தெரிவித்துள்ளார்.
பல்லின சமூகம் வாழும் பேர்மிங்ஹாம் பிராந்தியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் றோகெர் கோட்சிவ் என்னும் எம்.பி.யே இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும் பிரிட்டனில் வேலை வாய்ப்பின்மை வீதம் அதிகரிப்பதானது குறைந்தளவு வெளிநாட்டுத் தொழிலாளர்களே நாட்டிற்குத் தேவையென்பதை உணர்த்தியுள்ளதாகவும் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே இவ் விவகாரத்தை முன்வைத்த றோகெர் கோட்சிவ் இவ் விடயத்தில் நாம் மிகக் கவனமாக இருப்போம். ஆனால் சமூகங்களுக்கிடையில் நிலவும் சிறந்த உறவை சீர்குலைக்கமாட்டோமெனத் தெரிவித்துள்ளார்.
இதுதவிர பிரிட்டனில் குடியுரிமையைப் பெறுவதற்காக போலித் திருமணங்கள் மூலம் நாட்டுக்குள் நுழையும் ஆண்களை நாடுகடத்த வேண்டுமெனவும் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசாங்கத்தின் குடியேற்றக் கொள்கையை குடிவரவு அமைச்சர் பில் வூலஸ் கடுமையாக விமர்சித்ததைத் தொடர்ந்தே பாராளுமன்றத்தில் இது தொடர்பான விவாதம் ஆரம்பமானது.
தஞ்சக் கோரிக்கைகளை நாம் சிறந்த முறையில் ஆராயாததன் மூலம் எமது சமூகங்களுக்கிடையில் பிளவுகளும் வெளிப்படுத்தப்படாத துயரங்களும் உருவாகியிருப்பதாக வூலஸ் தெரிவித்திருந்தார்.
ஆனால் வூலஸ் தனதுரையில் முன்னர் பதவியிலிருந்த கன்சவேடிவ் அரசாங்கத்தையும் தனக்கு முன்னர் குடியேற்ற அமைச்சராக பதவிவகித்த லியாம் பேர்னியையுமே குற்றஞ்சாட்டியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தனது தொகுதியில் பாகிஸ்தான், காஷ்மீர், இந்தியா, பங்களாதேஷ், இலங்கை, யேமன், சோமாலியா மற்றும் ஆபிரிக்காவின் பல பகுதிகளைச் சேர்ந்த பல்லின, பல கலாசாரங்களைக் கொண்ட மக்கள் வாழ்வதாகத் தெரிவித்த கோட்சிவ் இந்த சிறப்பான நகரத்தில் சமூகங்களுக்கிடையில் நிலவும் உறவு சீர்குலையாமல் இருப்பதற்கான நடவடிக்கைகளை நாம் மிகக் கவனமாக மேற்கொள்வோமெனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பல்லின கலாசாரங்களைக் கொண்ட இத் தொகுதியில் வேலைவாய்ப்பின்மை வீதம் அதிகரித்து வருவது சமூக ஒற்றுமைக்கு பாரிய அச்சுறுத்தலெனத் தெரிவித்துள்ளதுடன், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளைச் சேர்ந்த குடியேற்றவாசிகளையும் கட்டுப்படுத்துவது தொடர்பில் பிரிட்டன் ஆராய வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, திருமணப் பந்தத்திலிருந்து விடுதலை பெறுவதற்கான வழிமுறைகள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகவும் இவ் விவாதத்தில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

கருணாநிதி இலங்கைத் தமிழர் பிரச்சினை தொடர்பில் சோனியா காந்திக்கும் மன்மோகன் சிங்கிற்கும் நெருக்குதல் கொடுப்பாரா?

mr.kalakandan written this article in tinakural, i am posting here for our tamil people, pl send ur feedback.


இலங்கை இராணுவம் கிளிநொச்சி மாவட்டத்தின் வன்னேரிக்குளப் பிரதேசத்தைத் தனது கட்டுப்பாட்டுக்குக் கீழ்கொண்டு வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. மேலும் கிளிநொச்சிக்கு பன்னிரண்டு மைல் தொலைவில் இருக்கும் அக்கராயன்குளப் பிரதேசத்தில் இலங்கை இராணுவத்திற்கும் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குமிடையில் கடும் சமர் இடம்பெற்றும் வருகிறது.
அதேவேளை, முல்லைத்தீவு மாவட்டத்தின் தெற்குப் பிரதேசத்தில் இலங்கை இராணுவம் முன்னேற முயன்று வருகின்றது. கிளிநொச்சிக்கு தெற்கே கொக்காவில் பகுதியிலும் வடக்கே முகமாலைப் பிரதேசத்திலும் இராணுவம் முன்னேறத் தருணம் பார்த்து நிற்கிறது. இவ் அனைத்துப் போர் முனைகளிலும் இராணுவத்தை எதிர்த்து விடுதலைப் புலிகள் இயக்கம் தடுத்து நிறுத்தும் போரை முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றது. இரு தரப்பிலும் பெருமளவிலான உயிர்ச் சேதங்களும் கடுங்காயங்களும் நாளாந்தம் ஏற்பட்டு வருகின்றன.
இவ்வுச்சநிலைப் போரினால் சுமார் இரண்டரை இலட்சம் மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாகி உள்ளனர். வன்னிப் பெருநிலப்பரப்பை ஊடறுத்துச் செல்லும் ஏ9 நெடுஞ்சாலைக்கு மேற்கே உள்ள கிராமங்கள் பிரதேசங்களில் இருந்து அனைத்து மக்களும் தத்தமது வீடு வாசல்களை விட்டு வெளியேறிவிட்டனர். அவர்கள் அனைவரும் நெடுஞ்சாலைக்குக் கிழக்கே பாதுகாப்பான இடங்களைத் தேடிச் சென்று உரிய தங்குமிட வசதிகள் இன்றி வாழ்ந்து வருகின்றனர். காடுகளினிடையே மர நிழல்களிலும் வயல் பிரதேச மேட்டு நிலங்களிலும் வாழும் மக்களை போர் மட்டுமன்றிப் பருவமழையும் துரத்தி வருகிறது.
உணவு, உடை மருந்துகள் சிகிச்சை உட்பட அடிப்படை வசதிகள் இன்றி அவதியுறுகின்றனர். ஏற்கனவே முப்பதினாயிரம் மாணவர்கள் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாத நிர்ப்பந்தங்களுக்கு உள்ளாகி உள்ளனர். இந்நிலை 20062007 இல் கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட அவல நிலையைத் தமிழ் மக்கள் எதிர்கொண்டமை போன்றே இன்று வன்னிப் பெருநிலப்பரப்பின் மக்கள் எதிர்கொண்டு நிற்கின்றனர்.
இவ்வாறு அவலங்கள் மத்தியில் வாழும் மக்களுக்கு முடிந்தளவு நிவாரண உதவிகளை வழங்க அங்கு தொண்டர் நிறுவனங்கள் எனப்படுபவை இல்லை. ஐ.நா. தொண்டு நிறுவனம் உட்பட அனைத்து நிறுவனங்களும் கிளிநொச்சியில் இருந்தும் ஏனைய பகுதிகளிலுமிருந்தும் அரசாங்கத்தால் வெளியேற்றப்பட்டுவிட்டன. அவை வவுனியாவில் இருந்தே செயல்படுகின்றன. உணவு, அத்தியாவசியப் பொருட்களும் அனுப்பப்பட வேண்டுமானால் அரசாங்கத்தின் மற்றும் படைத்தரப்பின் அனுமதி பெற்றே அனுப்ப வேண்டிய நிலை. அதனால் விநியோகம் வெறும் பெயரளவிற்கானதாகவும் கண்துடைப்பாகவுமே இருந்து வருகின்றன.
அதேவேளை இடம்பெயர்ந்த மக்களை வவுனியா வருமாறு அரசாங்கம் விடுத்த வேண்டுகோளை மக்கள் ஏற்றுக் கொள்ளும் நிலையில் இல்லை. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று வவுனியா வந்தால் தாங்கள் பழிவாங்கப்பட்டு துன்புறுத்தப்படலாம் என்ற அச்சம். மற்றையது புலிகள் இயக்கம் மக்களை வவுனியா நோக்கிச் செல்ல அனுமதிக்காத நிலை காணப்படுகின்றமையாகும். இவ்வாறான இக்கட்டான நிலையிலேயே வன்னியின் மக்கள் போரின் நடுவே அவல வாழ்வு வாழவேண்டியவர்களாக உள்ளனர்.
இத்தகைய உச்ச நிலைப் போர்ச் சூழலில் தமிழகத்தில் ஈழத் தமிழர்களுக்கான மக்களின் உணர்வலைகள் மேலெழும்பி நிற்பதைக் காணமுடிகின்றது. ஏறத்தாழ தமிழகத்தின் எல்லாக் கட்சிகளுமே ஈழத் தமிழர்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டிய கட்டாயத்திற்குள் வந்து நிற்கின்றன. இருப்பினும் தமிழகத்துக் கட்சிகள் அனைத்தும் ஒரே குரலில் ஒரே நிலைப்பாட்டில் நின்று ஈழத் தமிழருக்காகக் குரல் கொடுக்க இயலாதவைகளாகவே காணப்படுகின்றனர். எவ்வாறு தான் இன உணர்வு என்றும் தொப்புள் கொடி உறவு என்றும் கூறினாலும் ஒவ்வொரு தமிழகத்துக் கட்சிகளுக்கும் தத்தமது சொந்த நிலைப்பாடு என ஒன்று உண்டு. அந்த நிலைப்பாடு அந்தத்தக் கட்சிகளின் பொருளாதார அரசியல் சமூக நோக்கின் அடிப்படையிலானதாகும். அத்துடன் அரசியல் அரங்கில் பதவி, அதிகாரம், பணம் தேடல் அந்தஸ்து மேல்தட்டு வாழ்க்கை போன்றவற்றையும் உள்ளடக்கியதாகும். இவற்றுக்கு அப்பால் இன உணர்வின் பாற்பட்ட கொதித்தெழல் புயலாக மாறுதல், எரிமலையாகச் சீறுதல் என்பதெல்லாம் கணநேர ""சோடா காஸ்'போன்றதேயாகும்.
மக்களிடம் காணப்படும் இன உணர்வின் காரணமான எல்லைக்குட்பட்ட அனுதாபம் ஆதரவுக்கும் கட்சித் தலைமைகள் கலை உலகப் பிரமுகர்கள் கொண்டிருக்கும் அனுதாபங்கள் ஆதரவுக்கும் வேறுபாடு உண்டு. முன்னையது மனித நேயம் மக்கள் சார்பு கடலுக்கு அப்பால் ஒரே இனமக்கள் படும் துயரங்கள் பற்றிய அக்கறைகளினால் ஏற்படுவது. பின்னையது அடுத்து வரும் தேர்தல்களில் எவ்வாறு வெற்றி கொள்ளலாம் அதற்கு ஈழத்தமிழர் ஆதரவு நிலை எவ்வாறு உதவப் போகின்றது என்பதைக் கணக்கிட்டு நிற்பதாகும். அவ்வாறுதான் தமிழகத்துக் கலை உலகம் எனப்படுவது காசு பறித்து கோடீஸ்வரர் லட்சாதிபதிகளாகும் வாய்ப்புப் பெற்றவர்களின் இருப்பை உறுதிப்படுத்த ஈழத்தமிழர் பிரச்சினையைக் கையில் எடுத்துள்ளமையாகும். முன்னையவர்கள் வாக்குகளைக் குவிப்பதில் கவனம் செலுத்துவோராவர். பின்னையவர்கள் பணம் கறந்து ஆடம்பர வாழ்வுக்கு கணக்குப் பார்த்து நிற்போராவர். உண்மையாதெனில் இரு தரப்பினரும் யதார்த்தத்தையும் பிரச்சினைகளின் உண்மைத் தன்மைகளையும் கணக்கில் கொள்ளாதவர். அடிப்படையில் இருதரப்பினர்களும் அரசியல் ஊடாகவும் சினிமா ஊடாகவும் மக்களை ஏமாற்றுவோரேயாவர்.
உண்மையாகவே ஈழத்தமிழர் பிரச்சினையில் அனைத்து தமிழகக் கட்சிகளும் ஒரே குரலுக்கும் நிலைப்பாட்டிற்கும் வந்திருக்க வேண்டும். பொதுக் கோரிக்கைகளும் நியாயமான தீர்வும் பற்றிப் பேசியிருக்க வேண்டும். இதை விடுத்து ஆளுக்கொரு நிலைப்பாட்டில் நிற்பதுதான் அவர்களது அரசியல் உள்நோக்கம் யாது என்பதையிட்டு சிந்திக்க வைக்கிறது. ஏற்கனவே ஈழத்தமிழர் பிரச்சினையில் மத்திய அரசின் முடிவு தான் தனது முடிவு எனக் கூறிய கருணாநிதியார் கம்யூனிஸ்ட் கட்சி, ஏனைய சில கட்சிகளும் நடத்திய உண்ணாவிரதத்திற்குப் பின் விழித்துக் கொண்டு சிலிர்க்க ஆரம்பித்தார். ஒரே கல்லில் பல மாங்காய்கள் வீழ்த்தும் தனது வழமையான நரித் தந்திரத்தில் இறங்கிக் கொண்டார். அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி இராஜிநாமாச் செய்யும் தீர்மானத்தை நிறைவேற்றினார். அதன் முதல் ஆளாகத் தனது மகளை இராஜிநாமாச் செய்யும் படி பின் திகதியிடப்பட்ட கடிதத்தைத் தன்னிடமே கொடுக்கச் செய்து ஏனையோரிடமும் வாங்கிக் கொண்டார். பெரும்பாலும் தத்தமது பதவிகளுக்கு ஆபத்து வராது என்ற நம்பிக்கையிலும் அப்படி வந்தாலும் அண்மையில் வர இருக்கும் தேர்தலில் தமக்குரிய பதவிகள் உறுதிப்படுத்தப்படும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர் கடிதம் கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள். எல்லாம் தள்ளாத வயதிலும் அருள்புரியும் முதலமைச்சர் கருணாநிதியின் கடாட்சம் என்றே தி.மு.க.வினர் உள்ளனர்.
அதேவேளை முதலமைச்சர் கருணாநிதி தமிழகத்தில் மனிதச் சங்கிலி என்றும் விளக்கக் கடிதம் என்றும் அடுத்த நடவடிக்கைக்குத் தயார் என்றும் கூறி வருகிறாரே தவிர மத்திய அரசுக்கும் சோனியா மன்மோகன் சிங் அரசுக்கும் நெருக்கடி கொடுக்கும் எச் செயலிலும் இறங்கத் தயாராக இல்லை. ஏற்கனவே தனது கூட்டாளிகளாக இருக்கும் இடதுசாரிக் கட்சிகள் அமெரிக்க இந்திய அணு சக்தி ஒப்பந்தத்தில் கடுமையான நிலைப்பாட்டை வகித்து அரசாங்கத்திலிருந்து வெளியேறினர். அப்போது கருணாநிதியார் மன்மோகன் சிங்கின் தாடி தடவி அமெரிக்க எசமானர்களின் பாதணிகளில் படிந்திருந்த தூசி தட்டித் தனது விசுவாசத்தைத் தெரிவித்தார். அதன் மூலம் அமெரிக்கா உள்ளிட்ட அந்நிய மூலதனம் தமிழகம் மேலும் மேலும் வரவேண்டும் எனப் பிரார்த்தித்துங் கொண்டார்.
மகள் கனிமொழி அவ்வொப்பந்தத்திற்கு ஆதரவு விளக்கம் கொடுத்து தனது கன்னிப்பேச்சை மாநிலங்கள் அவையில் நிகழ்த்தி ஆளுவோரை மனங்குளிர வைத்தார். இப்படியானவர்கள் ஈழத் தமிழருக்காக கண்ணீர் வடிப்பது தமிழகத்தின் மக்களது உணர்வலைகளை தமக்கான வாக்கு வங்கியாக மாற்றிக் கொள்ளவேயாகும். குறிப்பாக மக்களது கவனம் ஜெயலலிதாவின் பக்கம் திரும்பாமலும் மின்வெட்டு, பொருட்களின் விலை அதிகரிப்பு, காவிரிநீர்ப் பிரச்சினை வாழ்க்கை செலவின் துரித ஏற்றம் போன்றவற்றில் இருந்து தமிழக மக்களின் கவனத்தைத் திருப்பவுமே கருணாநிதி தூக்கமின்றி உண்ணாமல் உறங்காமல் ஈழத் தமிழருக்காக கண்ணீர் விட்டுக் கதறி அழுது நிற்கிறார்.
இன்றைய நிலை போன்று ஏற்கனவே ஈழத்தமிழரை நோக்கிய பேரவலம் வந்து போயின. கிழக்கில் இதே அளவான இரண்டரை இலட்சம் மக்கள் அகதிகளாகி அல்லற்பட்ட போது கருணாநிதியும் தமிழகக் கட்சிகளும் எதனைச் செய்தன. யாழ்ப்பாணம் முற்றுகைக்கு உள்ளாகிப் பட்டினி நிலைக்குத் தள்ளப்பட்ட போது கருணாநிதி நன்றாகத் தூங்கி எழுந்திருந்தார் அல்லவா? அன்று யாழ்ப்பாணத்திற்கு ஆபத்து எனக் கூறி இந்தியப் படைகள் வருவதற்கு இராமேஸ்வரத்தில் தயாராகி நின்றபோது தமிழகக் கட்சிகள் ஏன் கச்சை கட்டவில்லை. இன்றும் கூடக் குரல் கொடுக்கும் தமிழகக் கட்சிகள் தேர்தல் வருவதைக் குறியாகக் கொண்டே தமிழக மக்களின் உணர்வலைகளைத் தத்தமக்குப் பயன்படுத்திக் கொள்ள ஒன்றை ஒன்று முந்திக் கொள்கின்றன.
இவற்றைச் சுட்டிக் காட்ட வேண்டிய தேவையாதெனில் தமிழகத்தின் கட்சிகளையோ அன்றி மத்திய அரசின் மீதான எதிர்பார்ப்பைக் கொண்டோ ஈழத் தமிழர்களாகிய நாம் ஏமாந்துவிடக் கூடாது என்பதற்காகவே ஆகும். இந்திய மத்திய அரசிடமும் தமிழ் மாநிலக் கட்சிகளிடமும் ஆட்சிகளிடமும் ஏமாந்த வரலாறுதான் கடந்த காலம். தமிழர் தலைமைகள் யாவுமே அவர்கள் மீது காலத்திற்குக் காலம் எதிர்பார்த்த எதையுமே பெறமுடியவில்லை. தமிழர் கூட்டமைப்பினர் இந்தியப் பிரதமரைச் சந்திக்க முயன்ற வேளை அவர்களுக்கு கிடைத்தது ஏமாற்றம் மட்டுமன்றி அவமானமுமாகும். அண்மையில் கூட இரா.சம்பந்தனை வருமாறு கூறிய பிரதமர் இறுதிவரை சந்திக்கவே இல்லை. இவை எதனை எடுத்துக் காட்டுகின்றன. இந்திய மத்திய அரசிற்குத் தேவை முழு இலங்கை மீதான பொருளாதார மூலதனப்பிடியும் தனது கைளை மீறிச் செல்லாத அரசியல் நிலைப்பாடுமாகும். அவை இரண்டும் இந்தியாவின் பிராந்திய மேலாதிக்கத்திற்கான அடிப்படைகளாகும். இந்தியா இன்றுவரை ஈழத் தமிழ் மக்களுக்கு எதிராகச் செய்து வந்த ஆயுத உதவியும் விற்பனையும் யுத்தக் கப்பல் வழங்கல், பயிற்சிகள், யுத்த தளபாடங்களின் விநியோகம், கடல் கண்காணிப்பு, உளவு தகவல் பரிமாற்றம் யாவும் இரகசியமானவைகள் அல்ல. இவற்றையெல்லாம் தெரிந்து கொண்ட பின்பும் தமிழர் தரப்புத் தலைமை இந்தியாவிடம் இதற்கு மேலாக எதை எதிர்பார்க்கின்றது.
இவற்றை எல்லாம் சுயமரியாதையுடனும் சுயகௌரவத்துடனும் எடுத்துக் கொள்ளாத இத்தலைமைகள் மீண்டும் மீண்டும் இந்தியாவிடம் மண்டியிட்டு நிற்பது அல்லது தமிழகத்தின் ஊடாக டெல்லியை மனம்மாறச் செய்து உதவி பெறலாம் என எதிர்பார்ப்பது இயலாமையின் அப்பட்டமான வெளிப்பாடாகும். அதுமட்டுமன்றி தேசிய இனப் பிரச்சினையின் தீர்வுக்கு உரிய நிதானமான கொள்கையையும் நடைமுறையையும் முன்னெடுக்காமையின் எதிர் விளைவுமாகும். இவை தமிழர் தரப்புத் தலைமைகளின் சுயவிமர்சனத்திற்குரியதே அன்றி இதன் மூலம் ஆளும் பேரினவாத ஒடுக்குமுறையை எவ்வகையிலும் நியாயப்படுத்திக் கொள்வதற்காகவல்ல.
இலங்கை இராணுவம் கிளிநொச்சியைப் பிடிப்பதாலோ அன்றி முல்லைத்தீவைப் பிடிப்பதாலோ தேசிய இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடமுடியாது. சமாதானமும் இயல்பு வாழ்வும் வடக்கு, கிழக்கில் மட்டுமன்றி முழு இலங்கையிலும் நிகழ வேண்டுமாயின் நியாயமான அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும். அதற்கான பேச்சுவார்த்தையும் விட்டுக் கொடுப்புகளும் புரிந்துணர்வும் இரு தரப்பிலும் ஏற்பட வேண்டும். இதற்கான அடிப்படை முன் முயற்சி சகல தரப்பு மக்களிடமும் தான் உருவாக வேண்டும். இன்று சிங்கள மக்களின் உண்மையான அபிப்பிராயங்கள் வெளிப்படுத்தப்படுவது தடுக்கப்படுகிறது. அச்சுறுத்தப்பட்டு அமுக்கப்படுகிறது. சில ஆண்களுக்கு முன்பு சிங்கள மக்கள் மத்தியில் உரத்து ஒலிக்கப்பட்ட யுத்த எதிர்ப்பு குரலும் சமாதானத்திற்கும் நியாயமான அரசியல் தீர்வுக்குரிய செயற்பாடுகளும் அடக்கப்பட்டுள்ளன. அவ்வாறு பேசுவது செயற்படுவது தேசத்துரோகம் என்றளவிற்கு சிங்கள மக்களுக்கு பேரினவாதப் போதை ஊட்டப்பட்டுள்ளது. இப்போதையின் மயக்கம் தணியாதவாறு ஜே.வி.பி., தேசிய சுதந்திர முன்னணி, ஜாதிக ஹெல உறுமய மற்றும் அரசாங்கம் உள்ளிட்ட பேரினவாதிகள் தொடர்ந்து நஞ்சு கக்கிய வண்ணமே உள்ளனர்.