Thursday, January 8, 2009

திருமங்கலம் இடைதேர்தலும் , நான் போட்ட ஓட்டும்.ஐயா வணக்கமுங்க சாமி, என் பேரு கருப்பசாமி, திருமங்கலம் பக்கத்துல வளையங்குளம் ண்ற ஊரு சாமி, நாலாப்பு நாலு தடவ படிச்சதுனால, அதுக்கு அப்புறம் பள்ளிகூடத்துக்கு போகல.விவசாய கூலி நானு.போன மாசம் எங்கூர்ல தேர்தல் அறிவிச்சுபுட்டாங்க. மொத்த திருமங்கலமே திருவிழா மாதிரி ஜெ ஜெ ந்னு கூட்டம் சாமி. மொத்த எளந்தாரி பயலுங்க, எம்மாதிரி கூலி வேல செய்ரவங்க எல்லாம் இங்கிட்டு, அங்கிட்டு ஓடுறான்.

நம்ப கூலிகார நண்பன் இருளாண்டிட்ட கேக்கிறேன், என்னாட பத்து நாளா நீயும் வேலைக்கு போகாம, என்னாட செய்யுறே கேட்டா , போடா முட்டா பயலெ,கிறுக்கு பய தான் வேலைக்கு போவான், தேர்தல் திருவிழால்ல நீயும் கலந்துக்குடானு என்னைய வேற கூப்பிட்டான்.

வாடா திருமங்கலத்துக்கு போலாம்ன்ட்டு, அந்த உசர பஸ்ல , சாமி டிக்கெட் ஏழு ரூபாய்ம்ல,இருளாண்டி கூட்டிட்டு போறான்..சாமி... ஊர் எல்லையை தாண்டல, கொடியும், தோரணமும், கம்பும், கட்டையுமா லாரி, லாரியா கட் அவுட்டும் போற இடத்திலெ இறங்குது. ஆமாண்டா,இருளாண்டி நம்ம ஊரு கூலு மாரியம்மன் திருவிழா மாதிரி இருக்குதுடா ந்னு நான் சொல்ல,திருமங்கலம் வந்திருச்சு.இருளாண்டி ஒரு பெரிய மனுசன்ட்ட கூட்டி போனான், தலைவரெ,இவன் நம்ம ஆளூன்னு சொல்ரான்,டபக்குன்னு 1000 ரூபா நோட்டு எடுத்து நீட்டிட்டார்,பக்குனு ஆயிருச்சு எனக்கு பத்து ரூபாய்க்கு பஸ்ல ஏற வழியில்லாத எனக்கு1000 ரூபாயா,; வாங்கி சட்டை பையிலெ பின்னம் பக்கமா பத்திரமா வைச்சுகிட்டேன்.பெரிய மனுசன், ஓட்ட நம்ம கட்சிக்கு போட்டுருன்னாரு.எங்கூடவே ஒரு ஆயிரம் எலந்தாரி பயலுக 1000 ரூபாய் நோட்ட வாங்குறான்.

அப்ப முடிவு பண்ணேன் சாமி, இன்னும் ஒரு மாசத்துக்கு கூலி வேலைக்கு போககூடாதுன்னு, அப்புறம் அந்த உசர பஸ்ல காலு மேல காலு போட்டுக்கிட்டு வந்தேன்.வரும் பொழுது வயிரு முட்ட சாராயம் போட்டுகிட்டு வீட்டுக்கு வந்தா, என் குத்த வெச்ச சிறுக்கி அதாங்க என் பொண்டாட்டி அன்னகிளி ,குத்த வெச்ச பொழுது எப்படி உக்காந்து இருந்தாலோ ,அப்படியே இப்பவும் இலவச கலர் டிவி முன்னால் உட்கார்ந்து சீரியல் பார்க்கிரா.

அடுத்த‌ நாள் காலைல‌ இருந்து , ந‌ம்ம‌ ஊருக்கு கார், காரா வ‌ருது, ஒவ்வொரு க‌ட்சிகார‌னா வாரான், சாமி என‌க்கு ஒட்டு போடுங்க‌ன்னு ஆளுங்க‌ட்சிகார‌ன் ஒவ்வொரு வீட்டுக்கும் 1000 ரூபாய் தாரான், இதை பாத்திட்டு அடுத்த நாளே எதிர்க‌ட்சி கார‌ன் 2000 ரூபாய் தாரான். நான் விடுவேனா, எல்லாத்தையும் வாங்கிபுட்டேன்ல‌.ஒரு வார‌ம் க‌ழிச்சு வீடு, வீடா வ‌ந்து ரேஸன் கார்டு வ‌ச்சுருக்க‌வ‌ங்க‌ வீட்டுக்கு த‌லைக்கு 2000 ரூபாய் கொடுத்தார் எங்க‌ த‌ர்ம‌ பிர‌பு ஒன்றிய‌ செய‌ளாளர்.

அப்புறம் ராசு ம‌க‌ன் ராசெந்திர‌ன் வ்ந்து, க‌ருப்பு ஊர் எல்லையிலெ நாலைக்கு க‌டா விருந்து வ‌ந்துடுடா சொல்றான். குடும்ப‌மே முத நாள்லருந்து கொல‌ ப‌ட்டினி தான். அடுத்த‌ நாள் பார்த்தா ஊரே விருந்துக்கு வ‌ந்திருக்கு, நூறூ ஆடு வெட்டி, 1000 கிலோ கறி சாப்பாடு போடுது ஆளூங்க‌ட்சி ஒன்றிய‌ம்.வ‌யிரு முட்ட‌ நானும்,என் பொண்டாட்டியும், என் புள்ளயும் சாப்பிட்டு, இலையை மூடுனா, இலைக்கு அடியிலெ 1000 ரூபாய் இருக்கு சாமி....சாப்பிட்ட‌ கார‌ சாப்பாட்டுல்ல‌ க‌ண்ணுல‌ வ‌ந்த‌ உப்பு க‌ண்ணீர் கூட‌ இனிப்பா மாறீருச்சு சாமி...


பிறவு, ஒன்றியம் வந்து, கருப்பசாமி ,தண்ணீர் பார்ட்டியும் இருக்கு, சாப்பிட்டு போன்னு சொன்னார் மனுசன்.கறி சாப்பாடு போட்டு, 1000 ரூபாயும் கொடுத்து,தண்ணீ பார்ட்டிக்கு வா ன்னு கூப்பிடுறார்னு ஆடி போய்ட்டேன், தெய்வம்யா நீ.

நாலு நாள் கழிச்சு, நம்ம அமைச்சரு தார, தப்பட்டை முழங்க, முழங்காலுக்கு மேல வேட்டிய மடிச்சுக்கிட்டு 50 பேரோட வந்தார். நம்ம வீட்டு அன்னகிளீ ஆரத்தி எடுத்துச்சு அமைச்சருக்கு, அவர் முன்னால வந்த எடுபிடி அன்னகிளீ கையிலெ ஒரு சேலையை கொடுத்திட்டு போய்ட்டான். வீட்டுக்குள்ளே போய் சேலையை விரிச்சு பார்த்தா ,சேலைக்குள்ளே ரெண்டு 1000 ரூபாய் நோட்டு இருக்கு சாமி.

பிறகு ஒரு நாள் நம்ம கருப்பு எம்.ஜி.ஆரு,பொண்டாட்டியுடன் வீதி, வீதியா வந்தார்,என்னைய பார்த்தவுடன் தம்பி நம்ம கட்சிக்கு ஒட்டு போடுங்கனு கேட்டார்.அப்புறம் சரத்குமார் அண்ணாச்சியும், சித்தி ராதிகாவும் ஒண்ணூ சேர வந்து , என்னைய பாத்து கும்பிட்டு, வோட்டு எனக்கு போடுப்பான்னு கேட்டாரு.அதிர்ச்சியிலே ஆடி போய்டேன், எம்மாம் பெரிய மனுசங்க ரெண்டு பேரும், நம்மளே பாத்து கும்பிடு போடுரானென்று எனக்கு அளூகையெ வந்திருச்சு சாமி.தேர்தலுக்கு ரெண்டு நா முந்தி,ராவு 10 மணி இருக்கும், தட தடன்னு கதவு தட்டும் சத்தம் கேட்டுச்சு, யாருன்னு கதவு தொரந்து பார்த்தா எங்க ஊர் சுயேட்சை வேட்பாளர் சந்தானம்,கூட 100 பேரும் இருந்தாங்க. கருப்பசாமி, கூலு மாரியம்மன் கோயில்கிட்ட நீ வான்னு சொல்ரார்.சரி பணம் தான் தர போறார்ன்னு போணேன்.
மாரியம்மன் கோயில் முன்னாடி ஊர்காரங்க அத்தனை பேரும் இருக்காங்க, ‌சந்தானம், இந்த ஊர்காரன் நான் தேர்தல்ல நிக்கிறேன், நீங்க எல்லோரும் எனக்கு ஓட்டு போடனும் சொல்லி கையெடுத்து கும்பிடுறான்.சரின்னு ஊர் சொல்லிச்சு. அதுக்கு சாட்சியா இந்த மாரியம்மன் முன்னால சத்தியம் பண்ணி கொடுங்கன்னு சந்தானம் கேட்டான். வேற வழியில்லாம நானும் கூலு மாரியம்மன் முன்னால சந்தானத்துக்கு ஒட்டு போடுறேன்னு சத்தியம் பண்ணேன்.


நாளைக்கு தேர்தல்,ராத்திரி 11 மணி இருக்கும்,எந்திருச்சு நின்னு எனக்கு கெடச்ச காச எண்ணி பார்த்தேன், சுளூவா 12000 ரூபாய் தேருச்சு, இந்த மாதிரி மாதம் ஒரு தேர்தல் வரகூடாதான்னு ஓரே கிறு கிறுப்பு.யாருக்கு ஓட்டு போடலாம்னு ஓரே குழப்பம். என் பொண்டாட்டி அன்னகிளிகிட்ட கேட்டேன்,எம்புள்ள யாருக்கு ஓட்டு போடலாம்னு? அது ஓரே வார்த்தையிலெ சொல்லிபிடுச்சு, இப்பிடி கேட்டுபிட்ட, சித்தி ராதிகாவுக்கு தான் போடனும்னு எனக்கு ஆர்டரே போட்டாள்.அவ ஒரு சீரியல் பைத்தியமுங்க;;;.

முடிவு பண்ணிட்டேன் சாமி.


மறு நா காலைல 8.30 மணிகெல்லாம் ஓட்டு போட போய்ட்டேன், சாவடியிலுருந்த போலீசு என்னைய மொறச்சு பார்த்தான்,அவன் கிடக்கிறான் ,என்ட இருக்கிற 12000 ரூபாய் அவன்ட கூட இருக்காதுனு மிதப்புல உள்ளே போணேன்.அங்க இருந்த ஆபிசரு எங்கையில மை தடவி, அடப்புக்குள்ள இருந்த ஓட்டு பெட்டிக்கு போக சொல்லி பட்டன அமுக்க சொன்னார்.

விடுவேனா சாமி.........

8000 ரூபாய் கொடுத்த ஆளுங்கட்சிக்கும், 4000 ரூபாய் கொடுத்த எதிர்கட்சிக்கும், வீடு தேடி வந்த கருப்பு எம்.ஜி.ஆருக்கும், எம் பொண்டாட்டி ஆசையா சொன்ன சித்தி ராதிகாவுக்கும், கூலு மாரியம்மன் கோயில்ல சத்தியம் வாங்குன எங்க ஊரு சந்தானத்துக்கும் ஓட்டு போட்டுட்டேன்.


சரி போகலாம்னு முடிவு பண்ணா ,அப்ப தான் ஞாபகம் வருது, பக்கத்து ஊரு பாரபத்தி காரன் சுயேட்சையாக நின்னு, நாலு நாளைக்கு முன்னால என் வீட்டு வாசல்ல கால்ல விழுந்து ஓட்டு கேட்டான்.சரி அவனுக்கும் ஓட்டு போட்ருவோம்னு அவனுக்கும் ஓட்டு போட்டேன் சாமி...


இப்ப தான் சாமி என் மனசு குளூந்து போச்சு:::

வீட்டுகிட்ட வந்தவுடன் பக்கத்து வீடு ராசு கேட்டான், மாப்ளே யாருக்கு ஓட்டு போட்டேன்னு?நான் எல்லோருக்கும் தான் ஓட்டு போட்டேன்னு சொன்னா, போடா மட பய மவணேனு சொல்றான்.

எனக்கு ரோசம் வந்திருச்சு, நீ என்னடா எங்கப்பார திட்டுரேன்னு சொல்லி,என் முதுகுல இருந்த அரிவாள எடுத்துப்புட்டேன்.அப்புறம் பங்காளி இருளாண்டி வந்து சமாதானம் பண்ணினான்.
எஞ்சாமிக‌ளா? நீங்கெல்லாம் ப‌டிச்சவ‌ங்க‌ தாணே? நான் ஓட்டு போட்ட‌து ச‌ரி தாணே? அதெப்ப‌டி சாமி, காசையும் வாங்கிபுட்டு, க‌றி சோறும் சாப்பிட்டு,கோயில்ல‌ ச‌த்திய‌மும் ப‌ண்ணி, ந‌ம்ம‌ கால்ல‌ விழறவனுக்கும் நாம துரோகம் பண்லாங்களா, நீங்களே சொல்லுங்க.

60 comments:

நட்புடன் ஜமால் said...

\\எம்மாம் பெரிய மனுசங்க ரெண்டு பேரும், நம்மளே பாத்து கும்பிடு போடுரானென்று \\

ஹையோ ஹையோ

அண்ணேன் அந்த கும்பிடு உங்கள பார்த்து கிடையாது, அவிங்களுக்கு உள்ளாரா இருக்கிற அகங்காரத்துக்கு, அக்கிரமத்துக்கு ... இன்னும் இன்னும்

நட்புடன் ஜமால் said...

Please remove word verifications ...

Bleachingpowder said...

நானெல்லாம் முப்பது ருபா கொடுத்த மூனு நாளு கண்ணு முழிச்சி வேலை பாப்பேனுங்கோ.பொறந்தா இடைத்தேர்தல் அடிக்கடி நடக்கிற இடமா பாத்து பொறக்கனும்.

வால்பையன் said...

//திருமங்கலம் இடைதேர்தலும் , நான் போட்ட ஓட்டும்.//

உங்களுக்கு திருமங்களத்தில் தான் ஓட்டா?

ஏண்டா திருமங்கலத்தில் பிறக்கலைன்னு வருத்தபட்டுகிட்டு இருக்கேன் நான்!

வால்பையன் said...

//போடா முட்டா பயலெ,கிறுக்கு பய தான் வேலைக்கு போவான், தேர்தல் திருவிழால்ல நீயும் கலந்துக்குடானு என்னைய வேற கூப்பிட்டான்.//

தேர்தல்ன்னா திருவிழாவா!
அட ஆமா ஸ்கூலுகெல்லாம் லீவு கூட விடுவாங்களே!

வால்பையன் said...

//இந்த மாதிரி மாதம் ஒரு தேர்தல் வரகூடாதான்னு ஓரே கிறு கிறுப்பு//

எனக்கும் தான்

Namakkal Shibi said...

//எஞ்சாமிக‌ளா? நீங்கெல்லாம் ப‌டிச்சவ‌ங்க‌ தாணே? நான் ஓட்டு போட்ட‌து ச‌ரி தாணே? அதெப்ப‌டி சாமி, காசையும் வாங்கிபுட்டு, க‌றி சோறும் சாப்பிட்டு,கோயில்ல‌ ச‌த்திய‌மும் ப‌ண்ணி, ந‌ம்ம‌ கால்ல‌ விழறவனுக்கும் நாம துரோகம் பண்லாங்களா, நீங்களே சொல்லுங்க.//

நியாயமான ஆளுண்ணே நீங்க! அவ்வ்வ்வ்வ்வ்!

ரொம்ப நல்லவருண்ணே!

வால்பையன் said...

//8000 ரூபாய் கொடுத்த ஆளுங்கட்சிக்கும், 4000 ரூபாய் கொடுத்த எதிர்கட்சிக்கும், வீடு தேடி வந்த கருப்பு எம்.ஜி.ஆருக்கும், எம் பொண்டாட்டி ஆசையா சொன்ன சித்தி ராதிகாவுக்கும், கூலு மாரியம்மன் கோயில்ல சத்தியம் வாங்குன எங்க ஊரு சந்தானத்துக்கும் ஓட்டு போட்டுட்டேன்.//


அண்ணே இது எலக்ட்ரானிக் ஓட்டு மிசின்ல முடியாதுன்னே!
முதல்ல எந்த ஓட்டு போடுருமோ அது தான் எடுத்துக்கும்!

KaveriGanesh said...

முதல் மூணு வருகையா வந்த‌ ஜமால்,பீளச்சிங், வால் பையன் அவர்களுக்கு நன்றி.
(ய‌ப்பா கண்ணூல தண்ணி வருது).

அன்புடன்

காவேரி கணேஷ்

முரளிகண்ணன் said...

நம்ம வட்டார வழக்கில் நல்லா எழுதியிருக்கீங்க. தொடருங்கள்

கே.ரவிஷங்கர் said...

நல்லாத்தான் இருக்கு அப்பு.அடி ஆத்தி இது என்ன புரசவா இருக்கு.ஓட்டு மெசின்ல அம்புட்டு பொத்தானயும் அமுக்க முடியுமா.எலக்சன் அயித்தான்(ஆபிசரு)கோவிச்சுடுகவாயில்ல. பாத்து எழுது அப்பு.

கூப்புட்டுடீகன்னு வந்தே.கவர்ல பணம்
வை.இல்லேன்னா நம்ம வலைக்கு வந்து கத/கவித/கட்டுர எல்லா படிச்சு கடிதாசி போடனும் அப்பு.ஆமா சொல்லிப்புட்டேன்.

அடிக்கடி வரனும் அப்பு.
சொம்மா பிலிம் காட்டக்கூடாது பிரிதர்.(நானு பக்கா பக்கா பக்கா
மெட்ராஸ் காசி மேடு காரான் பிரிதர்.)

ok.All the best.

அ.மு.செய்யது said...

அறியாமையின் உச்சகட்டத்தை அழகாய் எழுதியிருக்கிறீர்கள்......

வால்பையன் said...

முன்பிருந்த பேப்பர் ஓட்டுகளுக்கு வேண்டுமானால் இது சாத்தியம்

வால்பையன் said...

நகைச்சுவையுடன் கூடிய இயல்பான கதை நடை,

இதை கற்பனை!? என்று யாருமே நம்ப முடியாது!

தருமி said...

பிரிச்சி மேஞ்சிட்டீங்கல்ல ...

கூட்ஸ் வண்டி said...

நீங்களே உங்க நெஞ்சை தொட்டு சொல்லுங்க... அவங்கள்லாம் உங்க வீட்டுக்கு வந்து ரூபா கொடுத்தாங்க...
இப்ப நாங்கெல்லாம் உங்க வீட்டுக்கு வந்திருக்கோமே... ஒரு காப்பியாவது உண்டா?

அருண் said...

Awesome!

நையாண்டி நைனா said...

ஓட்டு போட்ட அந்த பெரிய மனிதர்கள் எல்லாம் நம்மை பார்த்து கையின் "நடுவிரலை" காட்டுவது போல் இருந்தது, பின்னரே அதை தெளிவா பார்த்தேன்.

Anonymous said...

super annaa....
pinnittinga

துளசி கோபால் said...

அடடா...... அடுத்த தேர்தல் எப்பண்ணே வருது? நானும் வந்து கொஞ்சம் காசைத் தேத்திக்கிறேண்ணே:-)))

சரவணகுமரன் said...

மொத படத்த பார்த்து ஒரு நொடி பயந்திட்டேன்... :-)

சாணக்கியன் said...

எப்படியோ நெறைய கம்மெண்ட்ஸ் வாங்கிட்டீங்க! வாழ்த்துகள்

ரமேஷ் வைத்யா said...

அடியேய்... நீயாடி படிக்காத ஆளு..?
பிரிச்சு மேஞ்சுட்ட போ.
ரொம்ப ரசித்தேன்.

ஷாஜி said...

அடி ஆத்தி இது என்ன புது கதையா இருக்கு.ஓட்டு மெசின்ல அம்புட்டு பொத்தானயும் அமுக்க முடியுமா? பாத்து எழுது சாமியோவ்...

தருமி said...

நானும் மொதல்ல அந்த படத்தைப் பார்த்துட்டு பயந்தே போய்ட்டேன்.

ஆமா, சித்திக்கு, சித்தப்பாவுக்கெல்லாம் எப்படி உங்க ஊர்ல ஓட்டு?

அமிர்தவர்ஷினி அம்மா said...

சித்தீஈஈஈஇ


ஆத்தி இம்புட்டு பணமா சம்பாரிச்சீங்க,
சொல்லியிருந்தா நானும் இடைக்கால குடிமகளா திருமங்கலத்துல ஜாயின் பண்ணியிருக்கலாம்.

Cable Sankar said...

வாழ்த்துக்கள்.. காவேரி கணேஷ்.. அருமையான நல்ல நகைச்சுவையுடன் எழுதியிருக்கீங்க.. பல சொன்னது போல எலக்ட்ரானிக் ஓட்டிங்கில் பல பேருக்குஓட்டு போட முடியாது.. வாழ்த்துக்கள்.. (சரி.. நீங்க மதுரையிலிருந்து என் அக்கவுண்டுல போட்டு விட்டதை நான் யாருக்கும் சொல்ல மாட்டேன்..)

ராஜ நடராஜன் said...

இந்தப் பதிவுக்கு இட்ட ஓட்டு வேறு எங்கோ திசை மாறிப் போய் விட்டது போல் தெரிகிறது.அந்த ஓட்டை இங்கே கொண்டு வாங்க.

ராஜ நடராஜன் said...

//நானும் மொதல்ல அந்த படத்தைப் பார்த்துட்டு பயந்தே போய்ட்டேன்.//

எனக்கும் அதே நெனப்புதான்:)

KaveriGanesh said...

வருகைக்கு நன்றி நாமக்கல் சிபி,

KaveriGanesh said...

முர‌ளி க‌ண்ணன்

நம்ம வட்டார வழக்கில் நல்லா எழுதியிருக்கீங்க. தொடருங்கள்


விடுவோமா சாமி

KaveriGanesh said...

கே.ரவிசங்கர்

நல்லாத்தான் இருக்கு அப்பு.அடி ஆத்தி இது என்ன புரசவா இருக்கு.ஓட்டு மெசின்ல அம்புட்டு பொத்தானயும் அமுக்க முடியுமா.எலக்சன் அயித்தான்(ஆபிசரு)கோவிச்சுடுகவாயில்ல. பாத்து எழுது அப்பு.கருப்பசாமிகிட்ட கேட்டேன், அவன் ஓட்டு போட்டதுனு சொல்றது,தான் நினைச்ச பட்டனை எல்லா அமுக்கினத .


வருகைக்கு நன்றி ரவிசங்கர்

KaveriGanesh said...

கதவை தட்டி, வருகைக்கு வந்த ஐயா தருமி அவர்களுக்கும், திரு.செய்யதுக்கும், அருண், நையாண்டி நைனாவுக்கும் என் சிரம் தாழ்ந்த நன்றிகள்

KaveriGanesh said...

கூட்ஸ் வண்டி

நீங்களே உங்க நெஞ்சை தொட்டு சொல்லுங்க... அவங்கள்லாம் உங்க வீட்டுக்கு வந்து ரூபா கொடுத்தாங்க...
இப்ப நாங்கெல்லாம் உங்க வீட்டுக்கு வந்திருக்கோமே... ஒரு காப்பியாவது உண்டா?

காப்பியா, வலையங்குளம் வீட்டுக்கு வாங்க ,வீட்டு முன்னாலெ கிடா ஒன்னு கட்டி கிடக்குது,விருந்தே வச்சுருவோம்

KaveriGanesh said...

துளசி கோபால் said...
அடடா...... அடுத்த தேர்தல் எப்பண்ணே வருது? நானும் வந்து கொஞ்சம் காசைத் தேத்திக்கிறேண்ணே


அதுக்கு இடைதேர்த‌ல் வ‌ர‌ணூம் அம்மா, வ‌ருகைக்கு ந‌ன்றி அம்மா

KaveriGanesh said...

சரவணகுமரன் said...
மொத படத்த பார்த்து ஒரு நொடி பயந்திட்டேன்... :-)


ஏ ராசப்பா போய் கூலு மாரியம்மன் கோயில்கிட்ட போய் மந்திரிகிர தண்ணீ எடுத்த்ட்டு போய் சரவணகுமரன் முகத்துல தெளிச்சுட்டு வா.

புள்ள பயந்து போய்ருக்கு

KaveriGanesh said...

வந்து வாழ்த்துக்கள் சொன்ன சாணக்கியன் ,ரமேஷ் வைத்யா ,ஷாஜிக்கும் நன்றி

தாமிரா said...

கதையில் நிகழ்ந்ததைப் போலவே பலமா மார்க்கெட்டிங் பண்ணிருக்கீங்க போல தெரியுதே.. கதையின் நடை சிறப்பாக இருந்தது, வாழ்த்துகள்.! நீங்கள் வோட்டர் மெஷினை அறியாதவராக இருக்கமுடியாது. அந்த ஹீரோவின் அறியாமை என்று வைத்துக்கொண்டாலும், கதையின் அடிநாதமே (உண்மைக்கதையாக இருந்தாலும் கூட) அதுதான் என்பதால் கொஞ்சம் ஏமாற்றமே.! மேலும் பல காலத்துக்கு முன்னால் இதே போன்ற ஒரு கதையையும் கடித்த ஞாபகம் வந்தது. அப்போது பேப்பர் ஓட்டு என்பதால் அது பொருத்தமாகவும் இருந்தது.

தாமிரா said...

ஒரு கதையையும் கடித்த ஞாபகம் வந்தது.// சே.! கடித்த இல்லபா.. படித்த..!

தாமிரா said...

அப்படியே மீ த 40யும் போட்டுக்குறேன்.! சந்தோஷமா?

Anbu said...

அடி ஆத்தி, இப்புடி கலக்கிபுட்டீகளே அப்பு, எங்க ஒளிச்சு வைச்சிருந்தீங்க இவ்வளவு நாளும்.......

சொல்ல்ல்ல்லவேயில்ல.............


அண்ணே,
ரசிச்சு படிச்சேன் , சும்மா சொல்லகூடாது நிசமாலுமே கலக்கிட்டீங்க.

அன்புடன்,
அன்பு

பழமைபேசி said...

Very Nice!

KaveriGanesh said...

வாங்க மழை,அமிர்தவர்ஷினி அம்மா

வந்திருந்தா உங்க பாப்பாவுக்கும் சேத்து ஓரு எக்ஸ்ட்ரா 4000 ரூபாய் கெடச்சுருக்கும்.

வந்ததுக்கு ரொம்ப டாங்ஸ்க‌

KaveriGanesh said...

Cable Sankar said...


(சரி.. நீங்க மதுரையிலிருந்து என் அக்கவுண்டுல போட்டு விட்டதை நான் யாருக்கும் சொல்ல மாட்டேன்..
)
வாங்க சங்கர் சார், ஒங்க‌ வாழ்த்து ஒன்னு போதும்.அது ச‌ரி, வாங்குன‌ காசுக்கு க‌ரெக்டா வட்டிய‌ கட்டிபுடுங்க‌.

KaveriGanesh said...

ராஜ நடராஜன் said...

இந்தப் பதிவுக்கு இட்ட ஓட்டு வேறு எங்கோ திசை மாறிப் போய் விட்டது போல் தெரிகிறது.அந்த ஓட்டை இங்கே கொண்டு வாங்க.

ராஜ நடராஜன் சார்,உங்க திசை மாறிப் போன பின்னுட்ட‌த்த‌ இங்க‌ போட்டுடேன்.

ராஜ நடராஜன் said...

இருளாண்டி ஒரு பெரிய மனுசன்ட்ட கூட்டி போனான், தலைவரெ,இவன் நம்ம ஆளூன்னு சொல்ரான்,டபக்குன்னு 1000 ரூபா நோட்டு எடுத்து நீட்டிட்டார்,பக்குனு ஆயிருச்சு எனக்கு பத்து ரூபாய்க்கு பஸ்ல ஏற வழியில்லாத எனக்கு1000 ரூபாயா,; வாங்கி சட்டை பையிலெ பின்னம் பக்கமா பத்திரமா வைச்சுகிட்டேன்.//

படிக்கும்போது சிரிப்பு வந்தது.யோசிக்கும் போது வருத்தம் வந்தது.மேலும் தொடர்கிறேன்.நன்றி ராஜ நடராஜன்.

உண்மைத் தமிழன்(15270788164745573644) said...

அருமை கணேஷ்..

நான் நினைக்கவே இல்லை.. இப்படியொரு ஊர்க்காரப் பேச்சு தங்களிடமிருந்து வரும் என்று.. அசத்தலாக உள்ளது.. தொடருங்கள்.. வாரத்திற்கு ஒரு பதிவாவது எழுதுங்கள்.. எழுத, எழுத வந்துவிடும்..

எப்படியோ திருமங்கலத்தில் மட்டுமே பணப்புழக்கம் இருக்கிறதே. அதுவரைக்கும் சந்தோஷம்..

குடுகுடுப்பை said...

கலக்கல் நண்பரே.

கும்க்கி said...

:-))
ஓட்டு பொறுக்கிகளை குறித்த கதையென்பதால் கருத்து ஏதுமில்லை...மண்னிக்கவும்.

வெண்காட்டான் said...

ஓட்டு போட்ட அந்த பெரிய மனிதர்கள் எல்லாம் நம்மை பார்த்து கையின் "நடுவிரலை" காட்டுவது போல் இருந்தது,


முற்றிலும் உண்மை. வாய்விட்டுச் சிரித்தேன்.

காவேரி மிக அருமையான பதிவு. தொடரட்டும்.

வில்லன் said...

ரொம்ப உண்மை. இப்படியே எல்லாரும் ஓட்டு போட்டு இருந்தா எல்லா கட்சிகரனுக்கும் கோவணம் தான் மிஞ்சும்.

KaveriGanesh said...
This comment has been removed by the author.
KaveriGanesh said...

வருகை தந்து, வாழ்த்திய அன்பு, பழமை பேசி, குடுகுடுப்பையார்,குமுக்கி,வெண்காட்டான் ,வில்லன் ,உண்மை தமிழன் அனைவருக்கும் மிக்க நன்றிகள்

KaveriGanesh said...

வாங்க தாமிரா,

எந்த திரட்டியிலும் இன்னும் என் வலைபதிவு இணையல, அது தான் இந்த மார்கெட்டிங்.


வந்து வாழ்த்தியதற்கு நன்றி

அதிஷா said...
This comment has been removed by the author.
அதிஷா said...

உங்க கதை சொல்லும் பாணி நல்லாருந்துச்சு... சூப்பர்ண்ணே

KaveriGanesh said...

வாங்க அதிஷா ,

அடிக்கடி வாங்க‌

ரொம்ப நன்றி

பிரபாகர் சாமியப்பன் said...

என்ன கொடுமை சார் இது

உங்க ஊரு முன்னால் MLA ரொம்ப நல்லவரு ..எங்க ஊரு MLA இன்னமும் அப்படியே இருக்கான்

Lucky said...

arumayana padivu...arputhaman karpanai...nagaichuvai thathumba sollu nadai...innum pala padivugalai padivu seyyunga anbarey...vaazthukal!

விக்னேஷ்வரி said...

Perfect! Nothing much to say.

KaveriGanesh said...

வருகைக்கு நன்றி பிரபாகர் சாமியப்பன், லக்கி, அன்பு சகோதரி விக்னேஷ்வரி